தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பாதிப்பு 30,000 ஆயிரத்தை நோக்கி நகர்கிறது. சென்னையில் ஒரு நாள் பாதிப்பு 7000- ஐக் கடந்து செல்கிறது.
1,62,000 பேர் மருத்துவமனையிலும், வீட்டுத் தனிமையிலும் சிகிச்சையில் உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் உச்சபட்சமாக 37,000க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.
நோயாளிகளுக்குப் படுக்கை கிடைப்பது பெரும் போராட்டமாக உள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் அறிவிக்கப்பட்டு 12 நாட்களைக் கடந்தும் தொடங்கப்படவே இல்லை. குறைந்த அளவிலான தடுப்பூசிகளே மத்திய அரசால் வழங்கப்படுகின்றன.
தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில நிதித் தேவை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி கொள்முதல் செய்யும் திட்டம் எதுவும் இருக்கிறதா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்ப, உலகளாவிய டெண்டர் விட அரசு முடிவெடுத்துள்ளது. நோய்ப் பரவல் சங்கிலியை உடைக்க 2 வார ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் வெளியில் நடமாடுவது குறையவில்லை.
இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்க சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்ட அழைப்பு விடுத்தார். அதன்படி மாலை 5 மணி அளவில் கூட்டம் திட்டமிட்டபடி தொடங்கியது.
இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம், காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி, முனிரத்தினம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாலி, சின்னதுரை, மதிமுக சார்பில் பூமிநாதன், சின்னப்பா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமச்சந்திரன், மாரிமுத்து, மமக சார்பில் ஜவாஹிருல்லா, கொமதேகா சார்பில் ஈஸ்வரன், தவாக சார்பில் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
துவக்க உரையாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். “ முதல்வராக பொறுப்பு ஏற்பதற்கு முன்னதாகவே பல்வேறு ஆலோசனை கூட்டத்தை நடத்தி, அறிவுரைகளை வழங்கியுள்ளேன்; உங்கள் அனைவரின் ஆலோசனைகளை பெற இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம், முழு முடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்தி அரசின் உத்தரவுகளை மீறுகின்றனர். அதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும்” என ஸ்டாலின் பேசினார். முதல்வர் பேசியதைத் தொடர்ந்து கூட்டம் நடந்துவருகிறது.