தமிழகம்

ராமநாதபுர மாவட்ட காவல்துறையின் கரோனா விழிப்புணர்வு ஆடியோவுக்கு துபாயிலிருந்து குரல் கொடுத்த வானொலி செய்தி வாசிப்பாளர்

எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா குறித்த காவல்துறையின் விழிப்புணர்வு ஆடியோவுக்கு துபாய் ரேடியோ கில்லியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரியும் அனுராதா என்பவர் குரல் கொடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் கரோனா பெருந்தொற்று சங்கிலி தொடரை அறுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு வேண்டுகோள் வாசகங்கள் அடங்கிய ஒலித்தொகுப்பு காவல்துறையின் சார்பாக முக்கிய மார்க்கெட் பகுதி, வாகன தணிக்கை செய்யுமிடங்கள் மற்றும் அனைத்து சோதனை சாவடிகளில் ஒலிக்கப்பட்டு வருகின்றது.

அந்தக் குரலுக்கு சொந்தகாரர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு, தற்சமயம் துபாயில் உள்ள துபாய் ரேடியோ கில்லி 106.4 என்ற தமிழ்ப் பண்பலையில் ரேடியோ ஜாக்கியாகவும், செய்தி வாசிப்பாளர் ஆகவும் பணிபுரிந்து அனுராதா என்பவர். எம்.ஏ. பொருளாதார பட்டதாரியான அனுராதா, திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கலைஞராகவும், பல்வேறு ஆண்டுகள் ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரிந்து, மேலும் பல்வேறு முன்னணி தமிழ் பண்பலைகளிலும் வர்ணனையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.



இவர் ஏற்கனவே மதுரை மாநகர காவல்துறை மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ஆகியவற்றுக்காக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒலித்தொகுப்பை தயாரித்து இலவசமாக அளித்துள்ளார்.

அதேபோல் தற்போதும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கரோனா தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை தயாரித்து தனது குரலில் பதிவு செய்து அனுப்பி உள்ளார்.

அந்த ஒலித்தொகுப்பே ராமநாதபுரம் மாவட்டத்தின் பட்டி தொட்டியெங்கும் காவல்துறை வாகனங்களிலும், ஒலிப்பெருக்கிகளிலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

சமூக அக்கறையுடன் தானே விழிப்புணர்வு வாசகங்களை எழுதி அதை தனது சொந்த குரலிலேயே ஒலித்தொகுப்பாக பதிவு செய்தும், இலவசமாக வழங்கியும் பொதுமக்களிடையே கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அனுராதாவின் சேவையை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.

SCROLL FOR NEXT