மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களில் பணி வழங்க வேண்டும் என, வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று (மே 13) வெளியிட்ட அறிக்கை:
"தமிழக மின்வாரியத்தில், கேங்மேன் பணி இடங்களுக்கான தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பித்தவர்கள் சுமார் 90,000 பேர். எழுத்து மற்றும் உடல் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் 14,956 பேர். நீண்ட நாட்களாக வழக்குகளால் தாமதப்பட்டு வந்த நிலையில், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்றும், நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டும், 9,613 கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை, 22.02.2021 அன்று, முந்தைய அரசு, குழப்பமான சூழலில், இரவோடு இரவாக அவசர கதியில் வழங்கியது.
அவர்களுள் 8,500 பேர் பணி ஏற்பு செய்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும், தங்களது சொந்த ஊர்களில், ஒப்பந்த முறையில் பணியாற்றி பயிற்சி பெற்றவர்கள். முறையாக தேர்வுகளில் கலந்துகொண்டு, பணி நியமனம் பெற்றும், தற்போது நிம்மதி அற்ற நிலையில் இருக்கின்றார்கள்.
பெரும்பாலானவர்களை, சொந்த மாவட்டங்களில் நியமிக்காமல் 300 முதல் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்டங்களில் நியமித்து இருக்கின்றார்கள். ஆனால், தங்கும் இட வசதி செய்து தரவில்லை.
அவர்களுக்கு சம்பளம் ரூ.15,000 என வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் பிடித்தம் போக மீதி சம்பளம் பெறுகின்றார்கள். புதிய இடங்களில், தங்கும் இடம் மற்றும் உணவுக்காகப் பெரும் தொகை செலவாகின்றது. மீதி உள்ள சொற்பத் தொகையில், குடும்பத்தை நடத்த இயலாத நிலையில் இருக்கின்றார்கள். விடுமுறையும் தருவது இல்லை.
அனுபவம் இல்லாத இடங்களில் பணி அமர்த்தியதால், பணியில் சேர்ந்த இரண்டு மாதங்களுக்கு உள்ளாக மூன்று கேங்மேன் தொழிலாளர்கள் விபத்துகளில் இறந்து விட்டனர். இதனால், தொழிலாளர்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மின்சாரம் என்பது அடிப்படைத் தேவை என்கின்ற நிலையில், நேரம் காலம் பார்க்காமல், தங்கள் உயிரைத் துச்சமென மதித்துப் பணியாற்றி வரும் கேங்மேன் தொழிலாளர்களை, சொந்த மாவட்டங்களில் பணியில் அமர்த்த வேண்டும்; வாரியப் பணியாளர்களுக்கு உரிய விடுப்பு மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும்; வாய்ப்புள்ள இடங்களில் வாரியக் குடியிருப்புகள் வழங்க வேண்டும்; கேங்மேன் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நேரம் வரையறை செய்திட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.
மேற்கண்ட கோரிக்கைகளை, தமிழக முதல்வர் நிறைவேற்றித் தருவதன் மூலம், கேங்மேன் பணியாளர்களது அச்ச உணர்வைப் போக்கி, பாதுகாப்புடன் பணியாற்றுவதற்குத் தகுந்த சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்".
இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.