தமிழகம்

கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் தலா 40 ஆக்சிஜன் படுக்கைகள்; தொற்றாளர்கள் 3 வகையாகப் பிரிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

க.ராதாகிருஷ்ணன்

கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் தலா 40 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் தலைமையில் நடந்த கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்தான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு கரூர் பழைய அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சித்த மருத்துவப்பிரிவு மையத்தைப் பார்வையிட்டார்.

அதன்பின் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது:

''கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை 3 நிலைகளாகப் பிரித்திருக்கின்றோம்.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் வீட்டில் தனியறை, தனிக் கழிப்பறை இருந்தால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஒரே வீட்டிலேயே மூன்று, நான்கு பேர் இருந்து தனி அறை, தனி கழிப்பிடங்கள் இல்லையென்றால் முதல் நிலையில் கரோனா வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும்.

2வது நிலையாக குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் மீது கவனம் செலுத்தி கரூர் பழைய அரசு மருத்துவமனை, குளித்தலை, வேலாயுதம்பாளையம், பள்ளபட்டி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மைலம்பட்டி, வெள்ளியணை ஆகிய 8 இடங்களில் உள்ள அரசு மருத்துவனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தலா 40 படுக்கை வசதிகளை ஏற்படுத்த ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை பணிகள் முடிந்து வரும் 25ம் தேதி பயன்பாட்டுக்கு வரும்.

3ம் நிலையாக அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். தற்போது ஆரம்ப நிலை, 2ம் நிலை, அவசர சிகிச்சை பெறுவோர் என அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்கியுள்ளனர். இதனை அரவக்குறிச்சி, காணியாளம்பட்டி என அந்தந்தப் பகுதிகளைப் பிரித்து கவனம் செலுத்த உள்ளோம்.

அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முதல் நிலையில் உள்ளவர்களுக்கு அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தங்க வைத்துச் சிகிச்சை அளிக்கப்படும். 2ம் நிலையாக அப்பகுதி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும். 3வது நிலையாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு கூடுதல் நிதிகளை வழங்கி உள்ளது அவற்றைப் பெற்று விரைவில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.''

இவ்வாறு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். அப்போது கரூர் எம்.பி. செ.ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT