பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

திருச்சி மாவட்டத்தில் தற்காலிக அடிப்படையில் கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட மருத்துவர்கள், செவிலியர்கள் தேர்வு; மே 15-ல் நேர்காணல்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் தற்காலிக அடிப்படையில் 3 மாதங்களுக்கு கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட விரும்பும் மருத்துவர்கள், செவிலியர்கள், மே 15-ம் தேதி நடைபெறவுள்ள நேர்காணலில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி இன்று (மே 13) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அரசு மருத்துவமனை மற்றும் கரோனா பாதுகாப்பு மையங்களில் சிகிச்சைக்காக அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர்.

இதையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மே 15-ம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது. மருத்துவ அலுவலர்களுக்கு அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், செவிலியர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நேர்காணல் நடைபெறும். பணியில் ஈடுபட விரும்பும் மருத்துவர்கள், செவிலியர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம்.

இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. மேலும், பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

மருத்துவ அலுவலர்கள்: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மாத ஊதியம்: ரூ.60,000.

செவிலியர்: டிப்ளமோ அல்லது பிஎஸ்சி நர்சிங் முடித்து, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மாத ஊதியம்: ரூ.14,000".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT