முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பாமக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியம் நன்கொடையாக வழங்குவார்கள் என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 13) வெளியிட்ட அறிவிப்பு:
"தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதையேற்று, பாமக சார்பில் அதன் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மற்றும் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக திரட்டப்படும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வசதி படைத்த அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.