தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் முதன்முதலாக தயாரிக்கப்பட்ட திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இயல்பான நிலைக்கு உற்பத்தி தொடங்கினால் நாளொன்றுக்கு 38 டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் படுக்கைகள், ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்துக்கு தினசரி 420 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்நிலையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரித்து தர தயாராக உள்ளதாக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது, இதையடுத்து தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு அந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது, அதன்படி ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உச்சநீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் மத்திய அரசு ஆக்சிஜன் தயாரித்தால் அதை விநியோகிப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை அனைத்து பணிகளையும் முடித்து ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கியது. ஆக்சிஜன் உற்பத்தியின் முதல் தயாரிப்பு நேற்று முடிவடைந்தது. நேற்று ஸ்டெர்லைட் ஆலையில் தயாரான 4800 லிட்டர் திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விழாவில் தூத்துக்குடி ஆட்சியர் கலந்துகொண்டு திரவ ஆக்சிஜன் செல்லும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் பேசிய அவர் ‘‘இன்று முதல் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கியுள்ளது. தினசரி உற்பத்தி படிப்படியாக இயல்பு நிலைக்கு உற்பத்தி செய்ய ஆரம்பித்தவுடன் தினசரி 38 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும்’’ எனத் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்க உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தும் தமிழக தேவைக்கே என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் தினசரி 35 டன் ஆக்சிஜன் தமிழக மருத்துவமனைகளுக்கு ஸ்டெர்லைட் ஆலை மூலம் கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.