டிஆர்டிஓ நிறுவனத்திடம் இருந்து 1.5 லட்சம் ஆக்சிகேர் என்ற ஆக்சிஜன் சப்ளை உபகரணங்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா 2-வது அலையில் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆக்சிஜன் அவசியமாக இருக்கிறது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே, நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு ரூ.322.5 கோடி செலவில் 1.5 லட்சம் ஆக்சி கேர் உபகரணங்களை டிஆர்டிஓ நிறுவனத்திடம் இருந்து கொள் முதல் செய்ய உள்ளது. ‘பி.எம்.கேர்’ நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒப்பு தலை அடுத்து 1 லட்சம் மேனு வல் மற்றும் 50 ஆயிரம் ஆட்டோமேடிக் ஆக்சிகேர் உபகரணங்கள், சுவாச முகக் கவசங்களுடன் கொள்முதல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்சிகேர் எஸ்பிஓ2 அடிப்படையிலான ஆக்சிஜன் ரெகுலேட்டிங் உபகரணம் ஆகும். இது சென்சார் மூலம் நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை அறிந்து அதற்கேற்ப ஆக்சிஜனை சப்ளை செய்யும். இதன்மூலம் நோயாளிகள் ஹைபாக்சியா நிலைக்குச் செல்வதை தடுக்க முடியும்.
தொழில்நுட்பம்
இந்த உபகரணம் மிக உயரமான இடங்களில் ராணுவ வீரர்களின் உயிர் காக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். தற்போது கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கும் நல்ல பலன் தரக்கூடியவையாக இவை உள்ளன.
டிஆர்டிஓ நிறுவனம், இந்த ஆக்சிகேர் உபகரணங்களை வழங்குவதோடு அல்லாமல் அவற்றை உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பத்தையும் பல தொழில் நிறுவனங்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.
இவை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் 500 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒடிசாவில் 9 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க உள்ளது. இந்த நிலையங்களில் இருந்து நிமிடத்துக்கு 1,000 லிட்டர் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
இந்த நிலையங்களுக்கான சிவில் மற்றும் எலெக்ட்ரிக் வேலைகளை தேசிய நெடுஞ்சாலை துறை ஏற்றுக் கொண்டுள்ளது.