டெல்லியைச் சேர்ந்தவர் டாக்டர் டிம்பிள் அரோரா (34). பெண் பல் மருத்துவரான இவருக்கும், தொழிலதிபரான ரவீஷ் சாவ்லாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில், டிம்பிள் அரோரா கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயிற்றில் இருந்த 7 மாத சிசு இறந்து போனது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலமாக சிசுவை மருத்துவர் அகற்றினர். ஆனால், 26-ம் தேதிகரோனா வைரஸ் பாதிப்புக்கு மருத்துவர் டிம்பிள் அரோரா உயிரிழந்தார்.
அரோராவின் செல்போனை அவரது கணவர் ரவீஷ் சாவ்லா பயன்படுத்துவதற்காக எடுத்த போது, ஒரு வீடியோவை கண்டெடுத்தார். சிகிச்சையில் இருக்கும்போது டிம்பிள் அரோரா எடுத்த அந்த வீடியோவில், அவர் 2 நிமிடங்கள் பேசி இருக்கிறார். அதில் அவர், “கரோனா வைரஸ் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்று என்பதை தெரிந்து கொண்டேன். இந்த வைரஸை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னால் இப்போது பேச முடியவில்லை. இருந்தபோதிலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பேசுகிறேன். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். உங்களையும், உங்கள் நேசத்துக்குரியவர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை அவரது கணவர் சாவ்லா தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள் ளார். இந்த வீடியோவை பார்த்த லட்சக்கணக்கானோர், மருத்துவர் அரோராவுக்கு நன்றியையும், அவரது மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.