தமிழகம்

மழையால் சேதமடைந்த பள்ளியில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்- தி இந்து செய்தி எதிரொலி

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாவட்டம், முத்துப்புத்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மழையால் சேதமடைந்த மேற்கூரையை சரி செய்யாததாலும், சரிந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தாததாலும் விடுமுறைக்குப் பின் பள்ளி துவங்கிய முதல் நாளே மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளானது தொடர்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.

இந்நிலையில் பள்ளியை தொடர்பு கொண்ட மாநகராட்சி, கல்வித் துறை அதிகாரிகள் தற்போதைய நிலையை கேட்டறிந்தனர். மேலும் மரங்களை அப்புறப்படுத்தியதுடன், மேற்கூரையை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இதனால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.

பள்ளி வளாகத்தில் சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றதுடன், ஆசிரியர்களும் உற்சாகத்துடன் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர். பள்ளி சேர்க்கை நேரத்தில் செய்தி வெளியானது பயனுள்ளதாக இருந்தது என பெற்றோர் தெரிவித்தனர். 5 நாட்களுக்கு முன்பே இப்பணிகளை செய்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்ற தங்களின் வருத்தத்தையும் வெளிப்படுத்தினர்.

இதுதொடர்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்தியாளரிடம் பெற்றோர் கூறுகையில், 57 மாணவர்கள், 62 மாணவிகள் என 119 பேர் சத்துணவு சாப்பிடும் பள்ளியில் உரிய சமையல் கூடமும் இல்லை; புகைப்போக்கியும் கிடையாது. இதனால் பள்ளி வளாகத்திற்குள்ளேயே புகை சுற்றுவதால், குழந்தைகள் கண் எரிச்சலுக்கு ஆளாகின்றனர். சமையலறையை பெரிதாக கட்ட வேண்டும்.

தனி அறை இல்லாததால், சமையல் பொருள்களும் வகுப்பறையிலேயே வைத்து பராமரிக்கப்படுகிறது. புரொஜக்டர், மடிக்கணினி, கணினி, மற்றும் தொலைகாட்சி என அனைத்துப் பொருள்களும் பாதுகாப்பாக பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. பள்ளிக்கென தனியாக விளையாட்டு மைதானமும் இல்லை.

65 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளிக்கு நிதி ஒதுக்கி, புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்தால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றனர்.

SCROLL FOR NEXT