விழுப்புரம் வி.மருதூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (50). விவசாயியான இவர் கரோனா அறிகுறி இருந்ததாக கூறி நேற்று முன்தினம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். இவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் இருந்து ஒருவித பதட்டத்துடன் காணப்பட்டார். தனக்கும் கரோனா தொற்று வந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார். வெகு நேரமாகியும் அவர்வீடு திரும்பவில்லை. இந்த சூழலில் அவரது நிலத்திற்கு சென்று பார்த்தபோது அங்குள்ள கிணற்றில் சிவக்குமாரின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் விழுப்புரம் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிணற்றில் குதித்து தற்கொலை
போலீஸார் அங்கு சென்று மேற்கொண்ட விசாரணையில் சிவக்குமார், கிணற்றில் குதித்துதற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. பின்னர் சிவக்குமாரின் உடலை பொதுமக்கள் உதவியுடன் போலீஸார்கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அச்சப்பட எதுவும் இல்லை
கரோனா தொற்று வந்தாலும், பாதிக்கப்பட்டோரில் 99 சதவீதத்தினர் சில நாட்களில் முழு உடல் நலத்துடன் இயல்பு நிலைக்கு வந்து விடுகின்றனர். இதுபற்றி கிராமப் பகுதிகளில் போதிய விழிப்புணர்வு இல்லை. கரோனா பற்றி அக்கம்பக்கத்தினரிடம் பேசும் போது, ‘இது குணமாக கூடிய ஒரு தொற்று; அனைவருக்கும் வரும்’ என்பதை எடுத்து சொல்ல வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. இந்நிலையில் சிவக்குமாரின், மருத்துவ பரிசோதனை முடிவு நேற்று வெளியானது.
அதில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது குறிப்பிடத் தக்கது.