தமிழகம்

நியமன எம்எல்ஏக்களை நியமித்து குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்ற பாஜக துடிக்கிறது: புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக துடிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரியில் கரோனா தொற்று பெருகி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். மனித உயிரழப்பும் அதிகரித்துள்ளது.

அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்துள்ளது. மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளுநர் தமிழிசை தினமும் ஆய்வு என்ற பெயரில் ஊடகங்களில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதில் தான் அக்கறை‌ காட்டி வருகிறார். மத்தியில் ஆளும் பாஜக அரசின் மூலமாக மக்கள் உயிர்காக்கும் மருந்துகள் அல்லது நிவாரணப் பொருட்களை பெறுவதில் அக்கறை காட்டவில்லை.

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து, முதல்வர் மட்டுமே பதவியேற்று, அவரும் கரோனாவினால் பாதிக்கப்பட்டு சென்னை ‌மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை முழுமையாக பதவி ஏற்கவில்லை. எம்எல்ஏக்கள் கூட இன்னும் பதவியேற்கவில்லை.

ஆனால் அவசர அவசரமாக அரசியல் சட்ட விதிகளை ‌பயன்படுத்தி, மத்திய பாஜக அரசு தனது கட்சியை சார்ந்த மூன்று நபர்களை நியமன எம்எல்ஏக்களாாக நியமித்து இரவோடு இரவாக அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு நியமன எம்எல்ஏக்கள் மூலமாக தனது எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை உயர்த்தியும், சில சுயேச்சை உறுப்பினர்களை விலைக்கு வாங்கியும் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக துடிக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரை இல்லாமல் மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செய்யும் அரசியல் சட்ட விதிகளில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மத்திய பாஜக அரசின் இத்தகைய ஜனநாயக விரோதமான செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இந்த நியமன எம்எல்ஏக்களுக்கான உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

மேலும், நியமன எம்எல்ஏக்கள் நியமனம் குறித்து பாஜக தலைமை கலந்து ஆலோசித்ததா அல்லது தன்னிச்சையாக நியமித்ததா என்பது குறித்து மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி தெளிவுபடுத்த வேண்டும். பாஜக தன்னிச்சையாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தால் அக்கட்சியுடனான கூட்டணி குறித்து அவர் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT