கரோனா ஆரம்ப நிலை அறிகுறி இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே போன் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பதவியேற்ற பின் நேற்று மதுரை வந்த பி.மூர்த்தி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வரின் உத்தரவுப்படி அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட உள்ளோம். தனியார் மருத்துவ மனை, தனிமைப்படுத்தும் சிகிச்சை மையங்களில் போதிய வசதிகளை ஏற்படுத்தி கரோனா பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் வெள்ளிக்கிழமை (மே 14) தமிழக நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன் மற்றும் மதுரை, விருதுநகர், தேனி தொகுதி எம்பிக்கள், மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சி பாகுபாடு இல்லாமல் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. சுகாதாரம், வருவாய், காவல் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். போர்க்கால அடிப்படையில் கரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடக்கும்.
கரோனா தொற்று ஆரம்ப நிலை அறிகுறியுடன் இருப்பவர்களை வீட்டில் வைத்தே போன் மூலம் உரிய ஆலோசனைகளை வழங்கி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இதற்கென தனியாக மருத்துவர், செவிலியர்கள் குழு அமைக்கப்படும். மதுரை அரசு மருத்துவமனை மட்டுமின்றி மாவட்டத்திலுள்ள மற்ற அரசு, தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் முழு அளவில் தயார் நிலையில் வைக்கப்படும். மதுரை மாவட்டத்தில் இதுவரை 2.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்கள் நம்பிக்கையோடு இந்த பேரிடரை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும், என்றார். அமைச்சரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் உள்ளிட்ட அலுவலர்கள், முக்கிய திமுக நிர்வாகிகள் பலர் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.