சென்னை செனாய் நகர், புல்லா அவென்யூ சாலை காலை 11 மணியளவில் பரபரப்பாக காணப்பட்டது. பேண்ட் சட்டை அணிந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் இளைஞர் ஒருவருடன் மல்லுகட்டிக் கொண்டிருந்தது. அந்த இளைஞர், ‘என்னை கொல்ராங்க... கொல்ராங்க...’ என உச்சஸ்தாயியில் கதறிக்கொண்டிருந்தார்.
அந்த வழியாக செல்லும் அனைவரும் இந்த காட்சியைக் கண்டு பதறியவர்களாக அந்த இளைஞருடன் மல்லுகட்டிய நபர்களை சூழ்ந்துகொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் “நாங்கள் சென்னை பெருநகர ரவுடி ஒழிப்புப் படை போலீஸார்” என தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “இந்த இளைஞர் பெயர் ரோகன். அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர். பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி. இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். தற்போது கட்டப் பஞ்சாயத்து செய்வதாகவும், பலரை பணம் கேட்டு மிரட்டுவதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரிக்க அழைத்துச் செல்கிறோம்” என விளக்கமளித்தனர்.
ரோகனை 4 போலீஸாரால் மடக்கிப் பிடிக்க முடியவில்லை. ரோகனுடன் மல்லுகட்டியதில் ரவுடி ஒழிப்பு படையினர் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்துப் பிறகு உதவிக்கு வருமாறு அமைந்தகரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே 10-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு திரண்டு வந்தனர். அவர்களாலும் திமிறிக் கொண்டிருந்த ரோகனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘என்னை கைது செய்தால் தற்கொலை செய்து கொள்வேன்’ என ரோகன் சொல்லிக்கொண்டே போலீஸ் ஜீப்பின் மீது மோதிக்கொள்வது, அருகிலுள்ள சாலையோர சுவரில் மோதுவது என ரகளை செய்து கொண்டிருந்தார். ரோகனின் உறவினர்கள் போலீஸாரை சூழ்ந்து கொண்டு கைது செய்யவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த வழியில் சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்க்க திரண்டதால் அப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு போலீஸார் ரோகனை மடக்கி ஜீப்புக்குள் திணித்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.