இன்று பிறை தென்படாததால் மே 14 - வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகை ரமலான் ஆகும். இறைவனின் திருவசனங்கள் இறங்கிய மாதம் என்பதால் ரமலான் மாதத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் இரண்டு கடமைகள் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன. சூரிய உதயத்துக்கு முன் உணவு உண்டு, இடையில் அன்னம், தண்ணீர் இல்லாமல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருக்கும் நிகழ்வை ரமலான் மாதத்தின் 30 நாட்களும் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பர். இது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.
இதேபோல் மற்றொரு கடமையாக, ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது வருமானத்தில் 7 சதவீதத்தை தானம் செய்ய வேண்டும். ஜகாத் எனப்படும் இது, இருப்போர் இல்லாதவருக்கு கொடுக்கும் நிகழ்வாகும். அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே என்கிற அரிய தத்துவத்தின் அடிப்படையில் இல்லாதோருக்கும், ஏழை, எளியோருக்கும் தானம் அளிப்பார்கள்.
30 நாள் நோன்பு கடைப்பிடிக்கும் இந்த மாதத்தில் 5 வேளை தொழுகையுடன் கூடுதலாக தராவீஹ் எனப்படும் சிறப்புத் தொழுகையும் தினந்தோறும் இரவு தொழப்படும். 30 நாட்கள் பிறை கணக்கு பார்த்து நோன்பு வைத்து 30-வது நாளில் பிறை தெரிந்த மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். புத்தாடை அணிந்து காலை சிறப்புத் தொழுகையுடன் உறவினர் இல்லங்களுக்குச் சென்று இனிப்புகள் வழங்கி பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்.14 அன்று தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பிறை தென்படாததால் நாளை நோன்பும், நாளை மறுநாள் (மே 14 - வெள்ளிக்கிழமை) ரமலான் பண்டிகையும் கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுத்தீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகை அன்று காலை தமிழகம் முழுவதும் பள்ளி வாசல்களில், பொது மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது இடத்தில் தொழுகை குறித்த அரசு அறிவிப்பு நாளை வெளியாகலாம் எனத் தெரிகிறது.