‘கரோனா’ சிகிச்சைக்கான மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த சென்னையைப் போல் மதுரைக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென் மாவட்டங்களில் ‘கரோனா’ தொற்று நோய் வேகமாகப் பரவுகிறது. ஆக்ஸிஜன் வசதி கிடைக்காமல் நாளுக்கு நாள் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
மதுரையில் மயானங்களுக்கு எரிக்க கொண்டு செல்லப்படும் கரோனாவால் இறந்தவர்கள் உடல்களுக்கும், சுகாதாரத்துறை வெளியிடப்படும் இறப்பிற்கும் முரண்பாடு உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. நேற்று மதுரையில் ஒரே நாளில் 1,024 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. 13 பேர் உயிரிழந்தனர்.
தென் மாவட்டங்களில் மதுரை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ஒரளவு ஆக்ச்சிஜன் படுக்கை வசதிகளும், உயர் தர மருத்துவ சிகிச்சை வசதிகளும் உள்ளன. மற்ற அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளாக இருந்தாலும் இன்னும் அவை மாவட்ட அரசு மருத்துவமனை தரத்திலேயே செயல்படுகின்றன. போதிய ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லை.
அதனால், இந்த மாவட்டங்களில் தீவிரமான கரோனா தொற்று நோயாளிகள் திருநெல்வேலி அல்லது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். மதுரையில் மட்டுமே 400க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெறுகின்றனர்.
ஆனால், மதுரையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்படுவதால் அவர்களுக்கு போதிய ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் கிடைக்காமல் போகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துமனை வார்டுகளிலும், நுழைவு வாயிலிலும் நோயாளிகள் ஆம்புலன்கள், ஆட்டோ, கார்களில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் மூச்சுதிணறி இறக்கும் பரிதாபம் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிகளவு நிகழத்தொடங்கியுள்ளது.
மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவர்களும் முடிந்தளவு நோயாளிகள் உயிரைக் காப்பாற்றவும், நோயின் தீவிரம் அடிப்படையில் அவர்களுக்கான ஆக்ஸிஜன் படுக்கை உறுதி செய்தாலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.
சென்னையில் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படத் தொடங்கியதும் சுகாதாரத்துறை அதிகளவு மருத்துவர்கள், செவிலியர்களை பணிநியமனம் செய்தது. கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருந்த 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் சென்னையில் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவர் கூட மற்ற மாவட்டங்களில் நியமிக்கப்படவில்லை. ஆனால், மதுரையில் ஏற்கெனவே போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லாமல் மருத்துவ மாணவர்களை கொண்டே கரோனா சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதனால், மருத்துவர்கள் பெரும்பாலானவர்களுக்கு தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைப் பெறுகின்றனர்.
அதனாலேயே, தற்போது கரோனா நோயாளிகளை 24 மணி நேரமும் கவனிக்க முடியாமல் அவர்களுடன் உறவினர் ஒருவரை கரோனா வார்டுகளில் அனுமதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதனால், அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, ரயில்வே மருத்துவமனை, மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், பேரையூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக மொத்தம் 1,887 படுக்கை வசதிகள் உள்ளன.
இதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,100 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன. 250 சாதாரண படுக்கைளும் உள்ளன. இதுதவிர மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த தோப்பூர் அரசு காசநாய் மருத்துவமனையில் 250 ஆக்ஸிஜன் படுக்கைகளும் உள்ளன. மாவட்டத்தில் மற்ற அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லை. சாதாரண படுக்கை வசதிகள் உள்ளன.
இதுதவிர கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் அறிகுறியில்லாத நோயாளிகள் சிகிச்சைப் பெறுவதற்காக 1,740 படுக்கை வசதிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 1,558 படுக்கை வசதிகள் உள்ளன.
ஆனால், தற்போது தொற்று பாதிக்கப்படும் நோயாளிகளில் 50 சதவீதம் பேர் வரை மூச்சுதிணறல் ஏற்படுவதாகவும், அவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவதால் அனைவரும் ஆம்புலன்ஸ்களில் ஆக்ஸிஜன் படுக்கைக்காக அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல், மதுரைக்கு ஒரு நாளைக்கு 500 குப்பிகள் ரெம்டெசிவிர் மட்டுமே வழங்கப்படுகிறது. இது, ஒரு நாளைக்கு 6 குப்பிகள் வீதம் 80 நோயாளிகளுக்கு மட்டமே போதுமானது. ஆனால், தினமும் 250க்கும் மேற்பட்டோர் வரிசையில் நிற்கின்றனர்.
1,400க்கும் மேற்பட்ட நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா சிகிச்சைப் பெறுகிறார்கள். கையில் பணம் இருந்தாலும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற முடியவில்லை.
அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிக்காக வரிசை முறை கடைபிடிக்கப்படுவதால் நோயாளிகளுக்கு கரோனா சிகிச்சை தடையின்றி கிடைப்பது கேள்விகுறியாகியுள்ளது.
ஆனால், சுகாதாரத்துறையின் அனைத்து தலைமை அதிகாரிகளும் சென்னையிலே இருப்பதால் சென்னையில் ஏற்படும் பாதிப்பை கண்கூடாக பார்ப்பதில் அங்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்வதற்கும், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் அமைப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
மதுரையில் சிகிச்சைக்காக நோயாளிகள் படும் சிரமத்தையும், அவர்களுக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளையும் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அமைச்சருக்கும், அதன் செயலாளருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், ஆட்சியர் துரிதமாக செயல்படாததால் மதுரையில் கரோனா தொற்றையும் கட்டுப்படுத்த முடியவில்லை. கரோனா சிகிச்சைக்காகவம் மக்கள் மருத்துவமனையில் வரிசையில் காத்திருக்கும் பரிதாபம் தொடர்கிறது.
இதே நிலை நீடித்தால் நோயாளிகள் உயிரிழப்பு இன்னும் அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், மதுரைக்கு கூடுதல் ஆக்சிஜன் ஒதுக்கீடும் பெற்று அதன் படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.
ஆக்சிஜன் படுக்கைக்காக நோயாளிகள் காத்திருக்கும் அவலத்தைப் போக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கை வசதிகளை வெளியிட்டு அதன் விவரத்தை மக்களுக்கு தெரிவித்து எங்கு படுக்கை வசதியிருக்கிறதோ அங்கு செல்வதற்கு நோயாளிகளுக்கு வழிகாட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையைப் போல் மதுரைக்கும் கரோனா சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்து நோயாளிகள் உயிரைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.