அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை மாவட்ட நிர்வாகமே நியமித்துக் கொள்ளலாம் என மாநில வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் இன்று (மே 12) ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பணீந்திர ரெட்டி கூறியதாவது:
”இந்த ஊரடங்கின் மூலம் கரோனா பாதிப்பு குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் பயன்பாடும் குறையும். கரோனா பாதித்தவர்களுக்கான சிகிச்சை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதல் கரோனா பாதித்து மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவையும் குறையும்.
ஆக்சிஜன் தேவைகள் குறித்து தகவல் அறிவதற்காக 104 எண் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, தேவையான ஆக்சிஜன் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பயன்பாடு குறித்து குழு அமைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது இனிவரும் காலங்களில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நியமித்துக் கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் கூடுதலாக 12,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் இந்த கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க நல்க வேண்டும்”.
இவ்வாறு பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டதோடு, புதுக்கோட்டை மீன் மார்க்கெட், கரோனா கவனிப்பு மையத்தையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி, சுகாதார துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயகுமார், நகராட்சிப் பொறியாளர் ஜெ. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.