தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. பாதிப்பு 30,000 ஆயிரத்தை நோக்கி நகர்கிறது. சென்னையில் ஒரு நாள் பாதிப்பு 7000- ஐக் கடந்து செல்கிறது. 1,62,000 பேர் மருத்துவமனையிலும், வீட்டுத் தனிமையிலும் சிகிச்சையில் உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் உச்சபட்சமாக 37,000க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.
நோயாளிகளுக்குப் படுக்கை கிடைப்பது பெரும் போராட்டமாக உள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் அறிவிக்கப்பட்டு 12 நாட்களைக் கடந்தும் தொடங்கப்படவே இல்லை. குறைந்த அளவிலான தடுப்பூசிகளே மத்திய அரசால் வழங்கப்படுகின்றன.
தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில நிதித் தேவை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி கொள்முதல் செய்யும் திட்டம் எதுவும் இருக்கிறதா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்ப, உலகளாவிய டெண்டர் விட அரசு முடிவெடுத்துள்ளது. நோய்ப் பரவல் சங்கிலியை உடைக்க 2 வார ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் வெளியில் நடமாடுவது குறையவில்லை. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்க சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டியுள்ளார்.
நாளை மாலை 5 மணி அளவில் இந்தக் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
“தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை முன்னிட்டு, அதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க மே 13 (நாளை) மாலை 5 மணியளவில், தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், "அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டம்" முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்க முதல்வர் ஸ்டாலின், அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைக்க் கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.