மருத்துவமனைகளில் செயல்படும் தடுப்பூசி மையங்களுக்கு, நோய்ப் பரவல் பயம் காரணமாக பொதுமக்கள் வரத் தயங்குவதை கருத்தில் கொண்டு, தடுப்பூசி மையங்களை வேறு இடத்திற்கு மாற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா தடுப்பு மருந்துகளின் இருப்பு, சிகிச்சை முறைகள், ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின் இருப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கும் வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 50,000 ஆக்சிஜன் படுக்கைகள் செயல்பாட்டில் உள்ளதாகவும், மேலும் 6,013 படுக்கைகள் மே 17இல் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார். இவை தவிர மேலும் 10 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தினமும் 900 முதல் 1000 வரை அதிகரித்து வந்த தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மே 9இல் 28,897, மே 10இல் 28,978, மே 11இல் 29,272 என உயர்வதாகவும், அதிகரிக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனின் அறிக்கையையும் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரெம்டெசிவிர் தேவைப்படும் என மத்திய அரசிடம் கேட்கும் நிலையில் 7 ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் ஆஜராகி ஆக்சிஜன் ஒதுக்கீட்டின் அளவு நாளொன்றுக்கு 465 என்பது 519 டன்னாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். டி.ஆர்.டி.ஓ. மூலம் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைப்பதற்காக பி.எம்.கேர் நிதியின் கீழ் மாநிலங்கள் நிதி கேட்டால் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும், அதன் பின்னர் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை டி.ஆர்.டி.ஓ. அமைக்க இயலும் என்றும் விளக்கம் அளித்தார்.
அப்போது பொதுநல வழக்குகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், ''பி.சி.ஆர் கிட், ஆக்சிஜன், ஸ்வாப் டெஸ்ட் கிட், தடுப்பூசி போன்றவற்றை அத்தியாவசியப் பொருட்கள் சட்டப் பட்டியலில் கொண்டுவர வேண்டும், புதுச்சேரியில் 3 மையங்களில் மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகம் போல நிறைய இடங்களில் பரிசோதனைகள் செய்ய உத்தரவிட வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்தனர்.
சபாநாயகர் பதவியேற்பு முடிந்தபின்னர் மெரினாவில் உள்ள நினைவிடத்தில் கரோனா கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் கூட்டம் சேர்ந்ததாகவும், வெற்றிக் கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவதாகவும் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார்.
அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்வார்கள் என நம்புவதாகத் தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மேலும் கூடுதல் இடங்களில் கிடைப்பதாக செய்திகளில் படித்ததைப் பதிவு செய்ததுடன், தடுப்பூசி கொள்முதலுக்கு சர்வதேச டெண்டர் எதும் வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதா? எனத் தெரிவிக்க உத்தரவிட்டனர். மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு வரப் பலர் தயங்குவதால், அதற்கு மாற்றாக வேறு இடங்களில் அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தனர்.
புதுச்சேரியைப் பொறுத்தவரை நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்கும் தகவலுக்கும், அங்குள்ள உண்மை நிலைக்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய புதுவை அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கூடுதல் பரிசோதனை மையங்கள் அமைப்பது குறித்தும் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டனர். நாளொன்றுக்கு 1000 முதல் 1200 என்று இருந்த உயர்வு தற்போது 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளதைக் குறிப்பிட்டு புதுச்சேரி அரசு கவனமுடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினர்.
கரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்த நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகள் பரிசோதனை செய்யவும், தடுப்பூசி செலுத்தவும் சிறப்பு வசதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டு வழக்கை நாளை (மே 13) ஒத்திவைத்தனர்.