தமிழகம்

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படுமா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மீண்டும் தொடங்கக்கோரிய வழக்கில் மத்திய,மாநில அரசுகளின் பதில் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி, உயர் நீதிமன்றக் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்சியில் 1963-ல் பாரதமிகு மின் நிறுவனம் (பெல்) தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஒரு மணி நேரத்தில் 140 மெட்ரிக் கியூப் ஆக்சிஜன் தயாரிக்கும் 3 பிளான்ட்கள் செயல்பட்டு வந்தது. இந்த பிளான்ட்களில் 2003-ல் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சில பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டால் 15 முதல் 20 நாளில் ஆக்சிஜன் உற்பத்தியை மீண்டும் தொடங்க முடியும்.

செங்கல்பட்டு திருக்கழுகுன்றத்தில் ஆண்டுக்கு 584 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்கும் எச்எல்எல் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் 2012-ல் தொடங்கப்பட்டது. இந்த வளாகம் 9 ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வரவில்லை.

தற்போது கரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் பூனே மற்றும் ஹைதராபாத்தில் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்துகள் பிற மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் அனுப்பி வைப்பதில் சிரமம் உள்ளன.

இதனால் திருச்சி பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கவும், செங்கல்பட்டு எச்எல்எல் தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது:

* அவசர நிலையைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு உதவி செய்த நிலையில், திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

* மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை விட்டு தனியார் நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வது ஏன்?

* தனியார் நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தடுப்பூசி வாங்கும் போது, அரசுக்கு சொந்தமான தடுப்பூசி மையங்களை புதுப்பித்து தடுப்பூசி தயாரிக்க எடுத்த நடவடிக்கை என்ன?

என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட கரோனா தொடர்பான வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

பின்னர், தலைமை நீதிபதி, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் பேரில் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் பதில் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி, அடுத்த விசாரணையை மே 17-க்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT