தமிழகம்

ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கவுள்ள நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினருடன் கனிமொழி எம்.பி சந்திப்பு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இன்னும் ஓரிரு நாளில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கவுள்ள நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினரை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் கனிமொழியிடம் அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மக்களை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுக்களை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் உடனிருந்தனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஆகிய இரு அமைப்புகளின் பிரதிநிதிகளையும் கனிமொழி தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது இரு குழுவினரும் கனிமொழி எம்பியிடம் தனித்தனி கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் பேராசிரியை பாத்திமா பாபு, வழக்கறிஞர் அதிசயகுமார் உள்ளிட்டோர் கனிமொழியிடம் அளித்த மனு விபரம்:

ஸ்டெர்லைட் ஆலை எக்காரணத்தைக் கொண்டும் தூத்துக்குடியில் இருக்கக் கூடாது.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்த தவறை கருத்தில் கொண்டு அவர்கள் மீது அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும்.

தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, பிரபு, மகேஷ் உள்ளிட்டோர் அளித்த மனு விபரம்: ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் இயற்றி கொள்கை முடிவு எடுத்து ஆலையில் உள்ள இயந்திரங்கள், கட்டுமானங்களை அகற்ற வேண்டும்.

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில், கல்வித் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு உரிய வேலை வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT