தமிழகம்

டிஎம்எஸ் - மே தின பூங்கா இடையே மெட்ரோ ரயில் பணிக்கு திட்ட மதிப்பீட்டை உயர்த்தி மீண்டும் டெண்டர்: மார்ச் மாதத்தில் பணிகள் தொடங்க திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை டிஎம்எஸ் - மே தின பூங்கா இடையே எஞ்சியுள்ள மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள உதிரி மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைக்கு ஏற்றவாறு திட்ட மதிப்பீடு தொகையை மாற்றியமைத்து மீண்டும் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் மீண்டும் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சைதாப்பேட்டையில் இருந்து மே தின பூங்கா வரையிலான பணிகளை மேற்கொண்டு வந்த நிறுவனம் திடீரென வெளியேற்றப்பட்டது. இதனால், கடந்த சில மாதங்கள் பணிகள் முடங்கின. எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ள புதிய நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

சைதாப்பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வரையில் பணிகளை மேற்கொள்ள எல் அண்டு டி நிறு வனம் தேர்வு செய்யப்பட்டு, தற் போது பணிகளை தொடங்கியுள் ளன. ஆனால் டிஎம்எஸ் - மே தின பூங்கா இடையே பணிகளை செய்ய நிறுவனத்தை தேர்வு செய்வதில் இழுப்பறி நிலை நீடிக்கிறது. இந்நிலையில், டெண்டர் திட்ட மதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டு புதிதாக டெண்டர் விடப்பட் டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சைதாப்பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வரையிலான பணிகளை ரூ.640 கோடி மேற்கொள்ள எல் அண்டு டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால், திட்ட மதிப்பீடு தொகை குறைவாக இருப்பதாக கூறி டிஎம்எஸ் - மே தின பூங்கா இடையிலான பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.

தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப ஏற்கெனவே இருந்த திட்ட மதிப்பீடு தொகையை ரூ.480 கோடியில் இருந்து ரூ.600 கோடியாக உயர்த்தியுள்ளோம். சுரங்கம் தோண்டும் பணிக்கும், ரயில் நிலையங்களை அமைக்கவும் வெவ்வேறு நிறுவனங்களை தேர்வு செய்யவுள்ளோம். இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரியில் டெண்டரை இறுதி செய்து மார்ச்சில் பணிகளை தொடங்குவோம். 2017-ல் ஒட்டுமொத்த பணிகளையும் முடிக்கவுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்கள் கவலை

அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் பணிகள் எப்போது முடிவுக்கு வரும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எண்ணி வரும் நிலையில், தற்போது பணிகளில் மீண்டும் தோய்வு ஏற்பட்டிருப்பது தங்களை மேலும், கவலை அடையச் செய்துள்ளது.

SCROLL FOR NEXT