தமிழகம்

7 பேர் விடுதலை குறித்து விரைவில் ஆலோசனை; தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும்: முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு அமைச்சர் ரகுபதி தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும்.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் மகாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

இதனால், தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வரலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இடஒதுக்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:

இந்திரா சஹானி வழக்கு

இந்திரா சஹானி வழக்கு தீர்ப்பு அடிப்படையில்தான் மராத்திய இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திரா சஹானிவழக்குக்குப் பிறகுதான், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்துக்கு, அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. தற்போது மராத்திய இடஒதுக்கீடு வழக்கில் வழங்கப்பட்ட 500 பக்க தீர்ப்பை படித்து அரசு தலைமை வழக்கறிஞர் முதல்வரிடம் உரிய முடிவை தெரிவிப்பார்.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதுதான் முதல்வரின் நோக்கம். இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டு, அது நிலைநிறுத்தப்படும்.

மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையே எங்கள் குறிக்கோள். விரைவில் முதல்வருடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT