தமிழகம்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு - தீயணைப்பு, வணிகவரி உள்ளிட்ட துறைகளின் உரிமம் பெற டிசம்பர் வரை அவகாசம் நீட்டிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பாக, தொழில், வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:

சுயமுதலீட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம்வழங்க ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 விழுக்காடு தொகை ரூ.168 கோடி உடனடியாக விடுவிக்கப்படும். மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறும்போது ஒப்பந்தத்துக்கான முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து டிசம்பர் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.

மே முதல் செப்டம்பர் வரைகாலாவதியாகும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் துறை, தொழில்பாதுகாப்புத் துறை, வணிக உரிமம்உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வமான உரிமங்கள், டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்துக்கான முதலீட்டு மானியம் பெறுவதற்கு விற்றுமுதல் 25 விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என்ற விதிமுறை வரும் டிசம்பர் 31 வரை 9 மாதத்துக்கு நீட்டிக்கப்படுகிறது.

கடன் உத்தரவாத நிதி ஆதாரத்திட்டம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின்கீழ் பெறப்பட்ட கடனுக்கான 5 சதவீத பின்முனை பட்டி மானியம் நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும். சிட்கோ மனைகள், பாஸ்ட் டிராக் அடிப்படையில் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்படும். சிட்கோ நிறுவனத்துக்குச் செலுத்தப்பட வேண்டிய மனை விலை, தவணைத் தொகை மற்றும் தொழிற்கூடங்களுக்கான வாடகை ஆகியவற்றை செலுத்த மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு சாலை வரி கட்டணங்கள் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து கட்ட அவகாசம் வழங்கப்படுகிறது. சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, கால்டாக்சி வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை கட்டுவதற்கும் காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி யிடம் வலியுறுத்தப்படும்.

மே 2021-ல் காலாவதியாகும் ஆட்டோ, கால்டாக்சி போன்ற வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையைச் செலுத்துவதற்குக் காலநீட்டிப்பு வழங்கக் கோரி மத்திய அரசு மற்றும் ஐஆர்டிஏவிடம் வலியுறுத்தப்படும். தொழில் துறை மூலம் வழங்கப்படும் மூலதன மானியம் 3 தவணைகளாக வழங்குவதற்குப் பதிலாக, ஒரே தவணையாக, தொழில் வளத்தை கருதி வழங்க முடிவு செய்யப்படுகிறது.

பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில் வரியை செலுத்த மேலும் 3 மாதகால அவகாசம் வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT