தமிழகம்

அறுவை சிகிச்சையின்போது தோள் பட்டையில் வைத்து தைக்கப்பட்ட பிளேட் வெளியே தெரிந்ததால் பனியன் தொழிலாளி அதிர்ச்சி

செய்திப்பிரிவு

திருப்பூர் அருகே விபத்தில் சிக்கிய பனியன் தொழிலாளிக்கு தோள் பட்டையில் வைத்து தைத்த பிளேட் வெளியே தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் மகராஜபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார். கடந்த மார்ச் 15-ம் தேதி வேலை முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது, பல்லடம் சாலையில் விபத்தில் சிக்கினார்.

இதில், அங்கு வைக்கப் பட்டிருந்த சாலை மையத் தடுப்பில் மோதி, தோள் பட்டையில் முறிவு ஏற்பட்டது.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த ஏப்.3-ம் தேதி அவரது இடதுபுற தோள்பட்டையில் சில்வர் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் வேலைக்கு சென்றார்.

இந்நிலையில், சில்வர் பிளேட்வைத்த இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வலி ஏற்பட்டுள்ளது. மேலும், மேற் குறிப்பிட்ட பகுதியில் இருந்து சீழ் வடிந்ததுடன், பிளேட்டும் வெளியே தெரிந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்த நிலையில் பிளேட் வெளியே தெரிந்ததால், திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மணிகண்டன் கூறும்போது, "தோள் பட்டையில் வைத்த பிளேட் மற்றும் எலும்பு வெளியே தெரிந்ததால் அதிர்ச்சியடைந்தேன். கடந்த 8-ம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற காத்திருக்கிறேன். தற்காலிகத் தீர்வாக மருந்து மட்டும் போட்டு கட்டி உள்ளனர். 4 நாட்களாக மருத்துவமனையில் உள்ள வார்டில் தங்கி உள்ளேன். எனக்கு எதிர்காலத்தில், இதுபோன்ற பிரச்சினை ஏதுமின்றி இருக்கும் வகையில், முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றார்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி ‘இந்து தமிழ் திசை செய்தியாளரிடம்’ கூறும்போது, "மணிகண்டனுக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில்சீழ் பிடித்துள்ளது. கரோனா தொற்று நேரம் என்பதால், அவருக்கு சிகிச்சை அளிப்பதில் சற்று தாமதமாகிறது. எலும்பு மூட்டு மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், மணிகண்டனுக்கு உரிய சிகிச்சை அளித்து விரைவில் பூரண நலத்துடன் வீட்டுக்கு அனுப்பிவைப்பார்கள்" என்றார்.தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் வெளியே தெரியும் பிளேட் பகுதி. (அடுத்த படம்) பாதிக்கப்பட்ட மணிகண்டன்.

SCROLL FOR NEXT