தமிழகம்

இறந்தவர் பெயரில் போலி மருத்துவ சான்றுடன் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

கரோனா நோயாளிகளுக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து வாங்க, இறந்தவர் பெயரில் போலி மருத்துவ சான்றுடன் கீழ்ப்பாக்கம் வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோர், அரசிடம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்தது. இதற்காக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்தகம் திறக்கப்பட்டது.

ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோர், நோயாளியின் ஆதார் அட்டை, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை சான்று, சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் சென்று, மருந்துக்கான பணத்தை அளித்து பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.

ரெம்டெசிவிர் மருந்தை வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதே மருந்து கள்ளச் சந்தையில் ரூ.50 ஆயிரம் வரையும், அதற்கு மேலும் விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 15-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்தவர்களில் 3 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, தஞ்சாவூரைச் சேர்ந்த செல்வம் என்ற கரோனா நோயாளிக்காக மருந்து வாங்க வந்ததாக கூறினர்.

மருத்துவர் அளித்திருந்த பரிந்துரை கடிதத்தையும் காண்பித்தனர். அதை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் குறிப்பிட்டிருந்த செல்வம், கடந்த 7-ம் தேதியே கரோனா தொற்றால் இறந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் அயனாவரத்தைச் சேர்ந்த கிறிஸ்டி பால் (34), மாதவரம், பால்பண்ணை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (43), சதீஷ் குமார் (37) என்பது தெரிந்தது. இவர்களுக்கு இறந்துபோன செல்வத்தின் மருத்துவ பரிந்துரை கடிதம் கிடைத்தது எப்படி என்று விசாரித்து வருகிறார்கள்.

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ய அவர்கள் திட்டமிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT