செங்கல்பட்டு காவல் மாவட்டம், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 16 பெண் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஆய்வாளர் ராஜாமணி அருள்மொழிதேவி பணியில் இருந்தார். நேற்று முன்தினம் மாலையில் சக காவலர்கள் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது போக்சோ வழக்கு தொடர்பாக குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். எனவே அனைவரும் சீக்கிரம் வரவேண்டும் என அறிவித்திருந்தார். ஆனால், காலை 6 மணி ஆகியும் சக காவலர்கள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண் ஆய்வாளர் காவல் நிலையத்தை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக் கொண்டு மறைமலை நகர் காவல் நிலையத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
சக பெண் காவலர்களும் மனு அளிக்க வந்த பெண்களும் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை உருவானது. பின்னர், நண்பகல் 12 மணிக்கு காவல் நிலையத்துக்கு வந்த பெண் ஆய்வாளர் அனைத்து காவலர்களையும் திட்டியபடியே சாவியை தூக்கி எரிந்ததாக கூறப்படுகிறது. பின்னர் காவல் நிலையம் திறக்கப்பட்டது. காலை முதல் 6 மணிநேரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் பூட்டப்பட்டிருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது, தொடர்பாக கேட்க மாவட்ட காவல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.