கரோனா நோய்க்கான மருந்து கண்டுபிடிக்க அறிவுசார் குழு அமைக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.
இந்தியாவில் கரோனா தொற்றால் 2020 மார்ச் மாதம் முதல் தற்போது வரை 5 முறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது இந்தியாவில் கரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
கரோனா நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா தொற்று பரவல் குறையவில்லை. தற்போது வரை கரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கரோனா மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படாமல் உள்ளன.
எனவே, கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், எய்ம்ஸ், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய வைராலஜி நிறுவனம், மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி சர்வதேச மையம், சி.எஸ்.ஐ.ஆர். ஜீனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் ஆகியன இணைந்து அறிவுசார் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணைக்கு வருகிறது.