பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

ரெம்டெசிவிர் மருந்து கேட்டு திருச்சியில் 3-வது நாளாக பொதுமக்கள் வாக்குவாதம்

ஜெ.ஞானசேகர்

ரெம்டெசிவிர் மருந்து வழங்கக் கோரி, திருச்சியில் 3-வது நாளாக இன்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்குத் தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை, திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்தில் மே 8-ம் தேதி தொடங்கியது.

இங்கு திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதால், 3 நாட்களாகவே கூட்டம் அதிகமாக உள்ளது.

முன்னதாக, ஞாயிறன்று (மே 09) மருந்து விற்பனை நடைபெறாத நிலையில், அன்றிரவே 20-க்கும் அதிகமானோர் மே 10-ம் தேதி மருந்து வாங்குவதற்காக கல்லூரி வளாகத்துக்கு வெளியே சாலையில் காத்திருந்தனர். மே 10-ம் தேதி காலை இந்த எண்ணிக்கை 200 ஆக அதிகரித்த நிலையில், 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. இதனால், டோக்கன் கிடைக்கப் பெறாதவர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருந்து வாங்காமல் அங்கிருந்து செல்லமாட்டோம் என்று கூறி சிலர் அங்கேயே காத்திருந்தனர். பின்னர், போலீஸார் வந்து அறிவுரை கூறி அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

இந்நிலையில், 3-வது நாளாக இன்றும் (மே 11) 200-க்கும் அதிகமானோர், ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்துக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால், இன்றும் 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது.

இதனால், டோக்கன் கிடைக்காதவர்களும், மருந்து கட்டாயம் தேவை என்ற நிலையில் இருந்தவர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்களில் பலர் தங்களது நிலைமையை ஆவேசமாக எடுத்துக் கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இங்கேயே காத்திருந்து மருந்து வாங்கிவிட்டுத்தான் செல்வோம் என்று கூறி 50-க்கும் அதிகமானோர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நேரிட்டது.

"குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வரவழைக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படியே தினமும் 50 பேருக்கு வழங்கப்படுகிறது. எனவே, இங்கு காத்திருப்பதால் எந்தப் பலனும் இல்லை" என்று கூறி அந்த இடத்தில் இருந்து கலைந்து போகச் செய்தனர்.

மருந்து கிடைக்காத அதிருப்தியில் இருந்தவர்களில் சிலர் கூறும்போது, "மாவட்டந்தோறும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யவும், அதுவரை திருச்சியில் கூடுதல் எண்ணிக்கையில் மருந்தை வரவழைத்து விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT