கோடை வெயிலும், புழுக்கமும் மக்களை வாட்டிவதைக்கும் நிலையில் மதுரையில் அடிக்கடி மின் தடையும் ஏற்படுவதால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை என மின் வாரியம் கூறுகிறது.
தற்போது மதுரையில் கரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது. நோய் பாதிப்பும், இறப்பும் அதிகமாக இருப்பதால் மக்கள் முழு ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
வீட்டில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மின்சிறி, ஏசி உள்ளிட்ட அனைத்து வகை மின்சாதாரணங்கள் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
தற்போது கோடை வெயில் மதுரையில் வழக்கத்திற்கு மாறாக சுட்டெரிக்கிறது. அதனால், மின் விசிறி அல்லது ஏசி இல்லாமல் வீடுகளில் மதியம் மட்டுமில்லாது இரவும் மக்களால் இருக்க முடியாது.
ஆனால், கடந்த சில நாட்களாக மதுரையில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்படுகிறது. மின்சாரம் இல்லாமல் மக்கள் இந்த வெயில், புழுக்கத்தில் வீடுகளில் இருக்க முடியாது. அதனால், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகம் தடையற்ற மின்சாரம் வழங்கும் பணியினை மேற்கொண்டுவருகிறது.
இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர் வணிதா கூறியிருப்பதாவது:
சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பட்டம் பறக்கவிட்டு விளையாடும் பொழுது பட்டம் அறுந்து, மின்பாதை, மின்கம்பம்,மின்மாற்றி மற்றும் துணைமின்நிலைய சாதனங்களில் சிக்கிக்கொள்வதாலும்.
குப்பைகளை மாடியில் இருந்து வீசும் பொழுது, மின் கம்பிகளில் குப்பைகள் படுவதாலும் மாலைகளை மின் கம்பிகளில் வீசுவதாலும் மின்தடை ஏற்படுவதுடன், இத்தகைய செயல் மின்விபத்திற்கு வழிவகுக்கிறது.
இம்மின்தடையினை சரிசெய்வதற்கு காலதாமதமும் ஏற்படுகிறது. இம்மாதிரியான நிகழ்வினால் தடையற்ற மின்சாரம் வழங்கும் பணிகள் தற்போது தடைபடுகிறது.
எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு இவ்விளையாட்டு ஆபத்தை விளைவிக்கும் என்பதை எடுத்துரைத்து, பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறும், பொதுமக்கள் குப்பைகள் மற்றும் மாலைகளை மின் தொடரின் மீது வீசாமலும் தடையற்ற மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு உரிய ஒத்துழைப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மின்தடை தொடர்பான அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மதுரை பெருநகர் மின்பகிர்மானவட்டத்தின் 24 மணிநேரம் செயல்படும் கணினமயமாக்கப்பட்ட மின் தடை நீக்கும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.
இந்த மையத்தை 1912 (பிஎஸ்என்எல் நெட்வொர்க் மட்டும், 0452 – 1912, 2560601 (மற்ற நெட்வொர்க்) போன்ற தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.