தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் கரோனா பரிசோதனை செய்துகொள்ள பலரும் அச்சப்பட்ட நிலையில், 115 வயதான 'மிட்டாய் தாத்தா' தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொண்டதற்கு மாநகராட்சி பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத் தெருவில் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் நேற்று நடமாடும் வாகனம் மூலம் அங்கு கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது, மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனைக்கு வாருங்கள் என அப்பகுதி மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், பலரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள அச்சப்பட்டு வர மறுத்துவிட்டனர்.
ஆனால், அதே தெருவில் வசிக்கும் 'மிட்டாய் தாத்தா' என்று அனைவராலும் அழைக்கப்படும் 115 வயதான முகமது அபுகாசிர் நேற்று தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரை மாநகராட்சி பணியாளர்கள் வெகுவாக பாராட்டினர்.