ஸ்டெர்லைட் ஆலையில் வரும் மே15 முதல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல், போதுமான ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை இருப்பு வைத்தல்தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது திமுக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் ஆஜராகி, ‘‘தமிழகம் கரோனா2-வது அலையால் கடும் தாக்கத்தைசந்தித்து வருகிறது. தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள் மத்திய அரசால் ஒதுக்கப்படவில்லை. பல கோடி ரூபாய் செலவில்அமைக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மற்றும் குன்னூரில் உள்ள தடுப்பூசிஉற்பத்தி மையங்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரஉத்தரவிட வேண்டும், என்றார்.
அதேபோல அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் ஆர்.தர், சி.கனகராஜ், எம்.எஸ்.கிருஷ்ணன், கவுதம் உள்ளிட்ட பலர் ஆஜராகி தமிழகம் மற்றும்புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட உத்தரவிட வேண்டும். புதுச்சேரியில் 2 அரசு மருத்துவமனைகள் மட்டுமே உள்ளதால் அங்குள்ள ஆரம்ப சுகாதாரமையங்களிலும் கரோனாவுக்கு சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும்.
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள முழுஊரடங்கு சற்று நம்பிக்கை அளித்தாலும் பதற்ற நிலையை தணிக்கும் வகையில் மண்டல வாரியாக அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்அலையின்போது கிருமிநாசினிகள் தெளித்து கரோனா பரவலைஓரளவுக்கு கட்டுப்படுத்தினர். ஆனால் தற்போது அதுபோன்றபணிகள் எதுவும் நடைபெறவில்லை. ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைக்க வேண்டும். யாரையும் காத்திருக்க வைக்கக்கூடாது. 12மாவட்டங்களில் சித்தா, ஆயுர்வேதா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எந்த நிலையில் உள்ளது என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வரும் மே 15 முதல் 40மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும், என தகவல் தெரிவித்தார்.
இதேபோல புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாலா, புதுச்சேரியில் போதிய அளவில் ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் படுக்கைகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
தடுப்பூசி தயாரிப்பு
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் ஆஜராகி, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தைசெயல்பாட்டுக்கு கொண்டுவர டெண்டர் கோரப்பட்ட நிலையில், யாரும் விண்ணப்பிக்காததால் அதற்கான கெடு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையத்தில்பாக்டீரியாவுக்கு மட்டுமே மருந்துதயாரிக்கப்படுகிறது. அங்கு கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய இயலாது என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கரோனா 2-வது அலை போய் 3-வது அலையின் தாக்கமும் இருக்கும் என்ற அச்சம் நிலவுவதால் அதை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ரெம்டெசிவிர் மருந்து
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 1.25 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் ரெம்டெசிவிர் போன்ற நோய் தடுப்பு மருந்துகளை தேவைப்படும் தனியார் மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சில நாட்களில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா தடுப்புக்கான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரசுகள் செயலாற்ற வேண்டும், என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை வரும் மே 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.