தமிழகம்

700 ஆண்டுகள் பழமையான ஒய்சாளர் கல்வெட்டு: சூளகிரி அருகே சிவன் கோயிலில் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

சூளகிரி அருகே 700 ஆண்டுகள் பழமையான ஒய்சாளர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக காப்பாட்சியர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மதுரை, விழுப்புரம், புதுக்கோட்டை, தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு, பழங்காலத்து பாறை ஓவியங்கள், நடுகற்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, ஓசூர், சூளகிரி பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. பல கல்வெட்டுகள் மண்ணில் புதைந்துள்ளதாக வரலாற்று ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சூளகிரியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீட்டர் தொலைவில் அத்திமுகம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பழமைவாய்ந்த ஜராவதீஸ்வரர் என்கிற சிவன் கோயில் அமைந்துள் ளது. இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின்போது கோயிலின் சண்டேசர் சன்னதிக்கு அருகே பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளும்போது, ஒரு பள்ளத்தில் கல்வெட்டு ஒன்று கண்டறியப் பட்டது. இதனை தொடர்ந்து கல்வெட்டு குறித்து தகவலறிந்த, கிருஷ்ணகிரி காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் அருங்காட்சியக தொழில்நுட்ப உதவியாளர் திருவள்ளுவன், பணியாளர்கள் கிருஷ்ணன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு குறித்து காப்பாட்சியர் கூறும்போது,

இக்கல்வெட்டு ஒய்சாள மன்னன் ராமநாதனுடையது ஆகும். இக்கல்வெட்டு வாயிலாக இக்கோயில் சோழர்களால் கட்டப் பட்டது என்பதும், இக்கோயில் அப்போது அழகிய சோழீசுவரம் என அழைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. கல்வெட்டில், குறுவேந்த வம்சத்து முரசு நாடாள்வான் மகன் தர்மத்தாழ்வாரான பூர்வதராயன் என்பவன் இக்கோயிலுக்கு அளித்த நில தானத்தை குறிப்பிடுகிறது. அத்துடன் இந்த கல்வெட்டு ஒய்சாள மன்னன் ராமநாதனின் 60-வது ஆட்சியாண்டில் பொறிக்கப் பட்டுள்ளது.

ராமநாதன் என்னும் ஒய்சாள மன்னன் குந்தாணியை தலை நகராகக் கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தவனாவான். இவனது 44-வது ஆட்சியாண்டு வரையிலான கல்வெட்டு மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள இக்கல்வெட்டு இவனது 60-வது ஆட்சியாண்டை குறிப்பதால், இவன் இதுவரை கருதப்பட்டு வந்ததைத் காட்டிலும் அதிக ஆண்டு ஆட்சி செய்துள்ளது தெரியவருகிறது. இக்கல்வெட்டு மூலம் வரலாற்று முக்கிய செய்தி தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT