சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்பாவு, பிச்சாண்டி முறையே போட்டியிடுவார்கள் என திமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 12-5-2021 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், தி.மு.க. சார்பில் பேரவைத் தலைவராக திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவு அவர்களும் - துணைத் தலைவராக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டி அவர்களும் போட்டியிடுகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 133 இடங்களைப் பெற்றுள்ளது. இதில், திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் அடக்கம்.
திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களும் பெற்றன. மொத்தம் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (மே 11) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் நடக்கிறது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். கரோனா பாதித்த எம்.எல்.ஏ.,க்கள் தனியாகப் பின்னொரு நாளில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கு நாளை மனுத்தாக்கல் நடைபெறுகிறது. இதில் தலைவர் பதவிக்கு மு.அப்பாவுவும், துணைத் தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் போட்டியிடுகின்றனர். இருவரும் போட்டியின்றி நாளை மறுநாள் (12/05/2021) காலை 10.00 மணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.