கரோனா முழு ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில் பகல் 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்பதால் உள்ளூர் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இதைg குறைக்க மாவட்ட நிர்வாகம், போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கரோனா இரண்டாவது அலையின் பிடியில் இந்தியா முழுவதுமே சிக்கியுள்ள நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகள், கார் உள்ளிட்ட போக்குவரத்துகள் முற்றிலும் இல்லாத நிலையே காணப்பட்டது.
இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையம் பேருந்துகள், பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
திண்டுக்கல்லில் மெயின் ரோடு, பெரியகடை வீதி, திருச்சி ரோடு, மேற்கு ரத வீதி, பழநி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள், ஹார்டுவேர்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் கடை என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்களின் தேவைக்காக அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் பகல் 12 மணி வரை திறந்திருந்ததால் நகர்ப்புறத்தில் மக்கள் நடமாட்டம் வழக்கம்போல் காணப்பட்டது.
திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பொதுமக்கள் கூட்டமாக நிற்கக்கூடாது, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்துகொண்டிருந்தனர்.
பகல் 12 மணி வரை உள்ளூர் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது. பகல் 12 மணிக்கு மேல் தான் முழு ஊரடங்கு என்பது போல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.
இருச்சக்கர வாகனப் போக்குவரத்து கூட இல்லாத நிலை மாலையில் காணப்பட்டது. இருந்தபோதும் காலையில் பகல் 12 மணி வரை கடைகளில் மக்கள் தேவையின்றி அதிக எண்ணிக்கையில் கூடுவதும், சாலைகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் நடமாடுவதும் தொடர்கிறது.
அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் வருபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க மாவட்ட ;நிர்வாகம், போலீஸ் நிர்வாகம் முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.