கரோனா பரவலைக் குறைக்க அரசு அறிவித்த 2 வார கால முழு ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைமுறைக்கு வந்தது. இதையொட்டித் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நேற்று 28 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 2 வார காலத்துக்கு முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்தது. முழு ஊரடங்கு காலத்தில் பால் விநியோகம், மருந்தகம், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும், தனியாகச் செயல்படும் காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கலாம் என்றும், மற்ற அனைத்துக் கடைகளும் மூடியிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி இன்று அதிகாலை 4 மணிக்கு முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தியிருந்தார்.
இதையொட்டி, திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், 4 டிஎஸ்பிக்கள், 20 காவல் ஆய்வாளர்கள், 40 உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 300 காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
மாவட்ட எல்லைகளில் ஓர் உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியம் இல்லாமல் வெளியே சுற்றுபவர்களைக் கண்டறிந்த காவல் துறையினர், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அதேபோல, முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் காலை முதல் மதியம் வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டதால் நகரின் முக்கியப் பகுதிகளில் தனியாகச் செயல்படும் மளிகைக் கடைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை, காய்கறி மார்க்கெட் இன்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டன.
பொதுமக்கள் அதிகம் வராததால் பெரும்பாலான கடைகள் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டன. இதனால், காலை 11 மணிக்கு அனைத்துக் கடைகளையும் மூடிய வியாபாரிகள் வீடு திரும்பினர். திருப்பத்தூர் நகரில் இயங்கி வரும் வாழை மண்டி முழுமையாக மூடப்பட்டது. ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட் இன்று வழக்கம்போல் திறந்திருந்தது.
உணவகம், தேநீர்க் கடைகளில் பார்சல் மூலம் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி பகுதிகளில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கின. தொழிற்சாலைக்குச் சொந்தமான வாகனங்களில் தொழிலாளர்கள் ஏற்றி வரப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் ஓடவில்லை.
மாவட்டத்துக்குள், மாவட்டங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் அனைத்துப் பேருந்து நிலையங்களும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ரயில் நிலையங்களில் குறைந்த அளவிலான பயணிகள் காணப்பட்டனர்.
மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவை திறந்திருந்தன. முழு ஊரடங்கைப் பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். நகராட்சி, பேரூராட்சி சார்பில் அந்தந்தப் பகுதிகளில் முழு ஊரடங்கு கண்காணிக்கப்பட்டது.