பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

ஊத்துக்குளி அருகே விபத்து: ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரில் இருவர் பலி

இரா.கார்த்திகேயன்

ஊத்துக்குளி அருகே சகோதரி மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு, உடன் பணியாற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு, ஒரே இருசக்கர வாகனத்தில் மூவர் திரும்பிய நிலையில், சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (26). அதே பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (20). நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (25). மூவரும் திருப்பூர் மண்ணரை பகுதி பாரப்பாளையத்தில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் பணி செய்து வந்தனர்.

இந்த நிலையில், ஊத்துக்குளி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள கருப்பசாமியின் சகோதரியின் மகனுக்குப் பிறந்த நாள் என்பதால், அதனைக் கொண்டாட நேற்றிரவு (மே 09) மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு நிறுவனத்துக்குத் திரும்பியுள்ளனர்.

அப்போது, ஊத்துக்குளி - திருப்பூர் சாலை எஸ்.பெரியபாளையம் பேருந்து நிறுத்தம் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் கருப்பசாமியும், அஜய்யும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த ராஜேஷ், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பாக, அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், இறந்த இரு இளைஞர்களின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகனம் தொடர்பாக, ஊத்துக்குளி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT