புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் இன்று (மே.10) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற வட மாநிலங்களை ஒப்பிடும்போது, இங்கு போதிய அளவுக்கு ஆக்சிஜன், மருந்துகள் இருந்தாலும் கூட புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.4 ஆயிரம் நிவாரண உதவியை அறிவித்திருக்கிறார். பொதுவாக நாட்டிலேயே புதுச்சேரி மாநிலத்தில்தான அதிக அளவில் மக்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் நிலை இருந்தது. ஆனால், தற்போது புதுச்சேரி மக்கள் தமிழகத்தை ஏக்கத்தோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வந்து முதல்வர் பதவியேற்ற பின்னரும் கூட, புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி நடந்துகொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். துணைநிலை ஆளுநர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனினும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சில கடமைகள் உள்ளன. தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி வழங்க ஆளுநர் மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பாக மக்கள் நலன் கருதி தமிழகத்தில் 2 நாட்கள் எல்லாக் கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டது போல புதுச்சேரியிலும் செய்திருக்க வேண்டும்.
தமிழக முதல்வர் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தை ஒட்டியிருக்கிற பகுதி என்பதால் இங்கும் அதுபோலவே முடிவுகள் எடுக்கப்பட்டு சலுகைகள் அளித்தால் நன்றாக இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி முதல்வர் விரவில் குணமடைந்து வர இறைவனை வேண்டுகிறேன்.
காரைக்காலைச் சேர்ந்தவர்கள் கரோனா தொற்றால் புதுச்சேரி ஜிப்மர் அல்லது அரசு மருத்துமனையில் உயிரிழந்துவிட்டால் அவர்களின் உடலைக் காரைக்காலுக்குக் கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் இதற்கென ஒரு தனி மையத்தை உருவாக்கி சிரமங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் செய்தியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும்.
முன்பு செய்யப்பட்டது போல, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோரை உரிய கண்காணிப்பு செய்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும். கரோனா தொற்றாளர்கள் வெளியில் நடமாடும் நிலை உள்ளது. அதைத் தடுக்க அதிக ஊதியம் கொடுத்து அதிகமான அளவில் களப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தைப் போல புதுச்சேரியில் அரசு சார்பில் மலிவு விலை உணவகம் திறக்கவும், தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை எடுத்துக் கொள்வோரின் செலவை அரசே ஏற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யார் என்ற போட்டிகளையெல்லாம் விட்டுவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து மக்களைக் காக்கும் களப்பணியில் இறங்க வேண்டும்''.
இவ்வாறு ஏ.எம்.எச்.நாஜிம் தெரிவித்தார்.