மக்கள் நலனுக்காக அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் நயினார் நாகேந்திரனும், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும், மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதியும், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தியும் வெற்றி பெற்றனர்.
இதற்கிடையே பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர், மூன்றாவது முறையாக எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராய நகரில் இன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, ’’மக்களுடைய குறைகளை எடுத்துக்கூறி, சட்டப்பேரவையில் பேசுவோம். தமிழ் மக்களின் தேவைகள், தமிழ் மொழி வளர்ச்சி, தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்துச் சட்டப்பேரவையில் நிச்சயமாகச் சுட்டிக் காட்டுவோம். இந்த வாய்ப்பை எங்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறோம்.
தமிழக அரசுக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. கரோனா காலத்தில் மக்கள் நலனுக்கான முழுமையான ஒத்துழைப்பைக் கொடுப்போம். எதிரிக் கட்சியாக இல்லாமல் எதிர்க் கட்சியாக இருந்து செயல்படுவோம்’’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அப்போது வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.