கு.பிச்சாண்டி: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை மே 07 அன்று பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்கவுள்ளனர். மறுநாள் 12-ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இதனிடையே, கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியைத் தற்காலிக சபாநாயகராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மே 8-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

1989, 1996, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து, திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டப்பேரவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் கு.பிச்சாண்டி.

தற்காலிக சபாநாயகராக அவர் நியமிக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "ஆளுநர், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளார். அவர், 10.05.2021 திங்கட்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஆளுநர் முன் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்வார்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று (மே 10) காலை 11 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தற்காலிக சபாநாயகராகப் பதவியேற்ற கு.பிச்சாண்டி நாளை (மே 11) தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 234 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

SCROLL FOR NEXT