தமிழகம்

சென்னையில் 6 நாட்களில் 55 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம்: அர்ப்பணிப்புடன் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள்

ச.கார்த்திகேயன்

சென்னையில் கடந்த 6 நாட்களில் 55 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள் ளன. பிற மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட துப்புரவு தொழிலாளர் கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி குப்பைகளை அகற்றி வருகிறார்கள்.

டிசம்பர் 1-ம் தேதி பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை நகருக் குள் குப்பைகள் அடித்து வரப்பட்டன. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தால் நாசமான துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் தெருவில் வீசினர். இதனால் வெள்ளம் வடிந்த பிறகு சென்னையில் திரும்பும் திசையெங்கும் குப்பைகளாகவும், சேற்றுக் கழிவுகளாகவும் காட்சியளித்தன. இதன் காரணமாக பல்வேறு நோய்த் தொற்றுகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

சுமார் 1 லட்சம் டன்னுக்கு குப்பைகள் மற்றும் சேறுகளை அகற்ற வேண்டிய நிலையில், 6-ம் தேதி சிறப்பு தூய்மைப்பணி தொடங்கப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியிடம் உள்ள டிப்பர் லாரிகளுடன், பிற மாநகராட்சிகளைச் சேர்ந்த 113 டிப்பர் லாரிகள், வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட 200 டிப்பர் லாரிகள் என மொத்தம் 619 டிப்பர் லாரிகளைக் கொண்டு மிகப்பெரிய அளவில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

துப்புரவு பணிக்கு வலு சேர்க்கும் விதமாக 11 மாநகராட்சிகள் 23 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைச் சேர்ந்த 9,697 துப்புரவு தொழிலாளர்கள் உட்பட 9,977 பேர் சென்னைக்கு உடனடியாக அழைக்கப்பட்டு, குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் மாநகராட்சி பகுதியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். அந்தந்த மண்டல அலுவலர்கள் மூலம் அவர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டன.

துப்புரவு பணியாளர்களின் அயராத உழைப்பால் கடந்த 6 நாட்களில் 55 ஆயிரத்து 118 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் வழக்கமாக மாநகராட்சியின் 25 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு 4 ஆயிரத்து 500 டன் அளவே குப்பைகள் அகற்றப்பட்டு வந்தன. வெளி மாவட்டத் தொழிலாளர்கள் வந்தபிறகு, குப்பைகளை அகற்றும் அளவு இரட்டிப்பாகியுள்ளது.

துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “எங்களுக்கு 3 வேளையும் உணவு கிடைக்கிறது. மழை கோட்டு, பூட்ஸ், கையுறை ஆகியவை சில தினங்களுக்கு பிறகுதான் வழங்கப்பட்டன. நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் மாநகராட்சி பள்ளிகளில் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு குளியல் மற்றும் கழிவறை வசதிகள் குறைவாகவே உள்ளன. நாங்கள் கூலிக்காக இங்கு பணி செய்ய வரவில்லை. இதை அர்ப்பணிப்பாகவே செய்கிறோம். அதனால் எங்களுக்கு ஏற்படும் சிரமங்களை ஏற்றுக்கொள்கிறோம்” என்றார்.

திண்டுக்கல் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் ஒருவர் கூறும்போது, “மழை வெள்ளத்தால், பொலிவிழந்து கிடந்த சென்னையை, தூய்மைப்படுத்த அழைக்கப்பட்டோரில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த மழையும், சேதமும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது போல, நான் இங்கு துப்புரவு பணி செய்தததும் எனக்கு ஒரு வரலாறுதான்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

வியாசர்பாடி இறைச்சிக் கூடம் அருகே சாலையில் தேங்கிய சாக்கடை கழிவுகளை அகற்றும் பணியில் விருதுநகர் நகராட்சியிலிருந்து வந்த 12 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு காலணிகள் வழங்கப்பட்ட நிலையில், சிலருக்கு காலில் புண் இருந்ததால், அவற்றை அணியமுடியவில்லை. இருப்பினும் காலணிகூட அணியாமல் கழிவுகளை அகற்றி அப்பணியை செய்தது, பார்ப்போரை நெகிழ வைத்தது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “விரைவாக 50 ஆயிரம் டன் குப்பைகளை அகற்றியதற்கு பிற மாவட்ட தொழிலாளர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம். அவர்கள் இல்லாவிட்டால் இது சாத்தியமாகியிருக்காது” என்றார்.

SCROLL FOR NEXT