அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் (ஏப். 07) பதவியேற்றுக்கொண்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அனைவரும் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குன்னம் தொகுதியின் எம்எல்ஏ-வும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கருக்கு நேற்று (ஏப். 08) இரவு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.
லேசான காய்ச்சல் மட்டுமே அவருக்கு இருப்பதால், மருத்துவர் அறிவுறுத்தலின்பேரில் சென்னை, அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
கரோனா தொற்று காரணமாக, இன்று (மே 09) நடைபெற்ற தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொள்ளவில்லை.
இது தொடர்பாக, எஸ்.எஸ்.சிவசங்கர் தன் முகநூல் பக்கத்தில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு வாரத்திற்கு, வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நலமாக உள்ளேன். அருள்கூர்ந்து அலைபேசியில் அழைக்க வேண்டாம்" எனப் பதிவிட்டுள்ளார்.