திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து, காவல் நிலையத்தில் அதிமுகவினர் இன்று புகார் அளித்தனர்.
திருச்சி மரக்கடை பகுதியில், 1995-ம் ஆண்டு திருச்சி மாநகர எம்ஜிஆர் மன்றம் சார்பில், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு முழு உருவச்சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலையை அப்போதைய மாநில அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், நல்லுசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருச்சி மாநகரில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டம் நடைபெறும் இடங்களில் மரக்கடை எம்ஜிஆர் சிலைப் பகுதியும் ஒன்று.
குறிப்பாக, மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில், இந்த இடத்தில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், எம்ஜிஆர் சிலையின் கையை உடைத்து, இன்று (மே 09) மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.
தகவலறிந்து அதிமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில், இளைஞரணி மாநில இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் சிலை அருகே திரண்ட அதிமுகவினர், "சிலையைச் சேதப்படுத்திய நபர்களைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வெல்லமண்டி என்.நடராஜன் புகார் அளித்தார்.
சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் சிலையை சேதப்படுத்தியவர்களைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, அதிமுகவினர் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர்.
இதனிடையே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் இச்சம்பவம் தொடர்பாக, "திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மா உணவகத்தை சேதப்படுத்துவது, எம்ஜிஆர் சிலையை உடைப்பது என திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்தடுத்து நிகழும் அராஜகங்கள், அக்கட்சியை தீயசக்தி என எங்கள் தலைவர்கள் அடையாளம் காட்டியதற்குச் சாட்சியாக அமைந்திருக்கின்றன.
இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்" எனப் பதிவிட்டுள்ளார்.