கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை, அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் சண்முகப்பிரியா (31). இவர், 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கர்ப்பிணியாக இருந்தாலும் சண்முகப்பிரியா வழக்கம்போல் இந்த நெருக்கடியான கரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணிக்கு வந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்குக் கடந்த 3 நாட்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக அவர் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (மே 09) பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "மருத்துவர்கள் மற்றும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் முன்களப்பணி வீரர்களாக நிற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்திட அறிவுறுத்தி இருக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மே 09) தனது ட்விட்டர் பக்கத்தில், "8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், கரோனா தடுப்புப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா, கரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்த செய்தி பெரும் வேதனை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.