என்எல்சி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கரோனா 2-வதுஅலை வேகமாக பரவி வருகிறது.இந்த தருணத்தில் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று, கரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில் மாநிலத்தில் பெருகி வரும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை செலுத்த ஏதுவாக மத்திய அரசிமிடமிருந்து ஆக்சிஜன் தேவையை வலியுறுத்திஉள்ளது.
இந்த நிலையில் திருச்சி பெல்நிறுவனம், எண்ணூர் அனல்மின் நிலையம், நெய்வேலி அனல்மின் நிலையம் போன்ற நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களும், தொழில் நுட்பத் திறனும், தொழில்நுட்ப வல்லுநர்களும் உள்ளனர்.
அங்கிருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாம் என கடந்த ஏப்ரல் மாதமே அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்நிலையில், என்எல்சி நிறுவனம் அமைந்துள்ள நெய்வேலி, ராஜஸ்தான், கடம்பூர், ஒடிசா சம்பல்பூர் ஆகிய இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய, ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் கோரியுள்ளது. மணிக்கு 36 நியூட்டன் கன மீட்டர் திறன் கொண்ட 9 ஜெனரேட்டர்களுடன் 500 ஆக்சிஜன் செறியூட்டும் கருவியை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் கோரியுள்ளது.
இதன்மூலம் 1,000 கன அடி ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே என்எல்சி நிறுவனம் ஒப்பந்தப் பணிகளை விரைந்து முடித்து தமிழகத்தில் நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, தமிழக அரசுக்கே வழங்கி உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.