தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் திருவாரூருக்கு வருவதாக வதந்தி: மருத்துவக் கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கையால் பரபரப்பு

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூருக்கு நேற்று வருவதாக, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கையொப்பமிட்ட கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் அவர் தொடங்கியபோது, வெற்றி பெற்ற பின்னர் திருவாரூருக்கு வந்து முதல் நன்றி அறிவிப்பு செய்வேன் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டா லின் நேற்று திருவாரூருக்கு வரவிருப்பதாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கையொப்பமிட்ட சுற்றறிக்கை, அரசு மருத்துவக்கல்லூரி ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. அந்தக் கடிதத்தில், ‘‘தமிழக முதல்வர் 8.5.2021 (நேற்று) அன்று திருவாரூருக்கு வருவதால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் உரிய சீருடையில் வர வேண்டும். தேவையான விவரங்கள் மற்றும் அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’’ என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் சமூக வலை தளங்களிலும் வைரலானதால், அனைத்துத் துறை அதிகாரிகளும் பரபரப்படைந்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் திருவாரூருக்கு நேற்று வரும் வகையில் திட்டம் எதுவுமில்லை. கடிதத்தில் உள்ள தகவல் உண்மையல்ல என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனால், முதல்வரை எதிர்பார்த்து காத்தி ருந்த திமுகவினரும் பொதுமக்க ளும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப்ராஜிடம் கேட்டபோது, “மருத்துவ மனை ஊழியர்கள் சரிவர பணிக்கு வராமல் இருப்பதைக் கண்டித்தும், அவர்களை முறைப்படுத்தவும் கடிதம் அனுப்பும்படி கூறி, அதில் திருவாரூருக்கு முதல்வர் வரக்கூடும் என நான் தட்டச்சு செய்ய சொன்னதை ஊழியர்கள் தவறுதலாக புரிந்துகொண்டு தட்டச்சு செய்ததால் நேரிட்ட குழப் பம்தான் இது” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT