அம்சவள்ளி, மேனகா 
தமிழகம்

ஒரு மாத மளிகை வாங்குவேன்; குழந்தைக்காகச் சேமிப்பேன்- கட்டணமில்லா பேருந்துப் பயணம் குறித்து பெண்கள் நெகிழ்ச்சி

அ.வேலுச்சாமி

குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வேன், குழந்தைகளுக்காகச் சேமிப்பேன் என்று கட்டணமில்லா பேருந்துப் பயணம் குறித்துப் பெண்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாநிலம் முழுவதும் மகளிர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வாக்குவாதம் செய்யக்கூடாது

கோவையில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அப்பேருந்துகளின் முன்புறக் கண்ணாடியில் 'மகளிர் பயணம் செய்யக் கட்டணமில்லை' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் சிறுமிகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைத்து மகளிர் பயணிகளையும் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும், இதுதொடர்பாக எவ்விடத்திலும், எவ்விதமான வாக்குவாதங்களும் நடைபெறாத வகையில் நடந்துகொள்ளுமாறும் அனைத்து நடந்துநர்களுக்கும் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் ஆர்.பொன்முடி உத்தரவிட்டிருந்தார். இதை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் குழுவினரும் ஆங்காங்கே தணிக்கையில் ஈடுபட்டனர்.

முதல் நாளிலேயே பெண்களிடம் மகிழ்ச்சி

இதுகுறித்துப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடியவர்களில் 40 சதவீதம் பேர் வேலைக்குச் செல்லக்கூடிய பெண்களே. அவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயணச் சீட்டு தேவையில்லை என்பதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேருந்துகளில் பயணித்ததை முதல் நாளிலேயே காண முடிந்தது' என்று தெரிவித்தனர்.

மாதம் ரூ.2,200 மிச்சமாகும்

இதுகுறித்துத் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாகப் பணிபுரியும் எம்.ராஜபேரிகை என்பவர் கூறும்போது, ‘திருச்சி அரியமங்கலத்தில் வசிக்கும் நான், வீட்டிலிருந்து மண்டையூர் அருகேயுள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த 13 ஆண்டுகளாகத் தினமும் பேருந்தில் சென்று பணிபுரிந்து வருகிறேன்.

அரியமங்கலத்திலிருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரடிப் பேருந்து வசதி இல்லாததால் அரியமங்கலத்திலிருந்து பால் பண்ணை ரவுண்டானா வரை ஒரு பேருந்திலும், அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட் வரை மற்றொரு பேருந்திலும், அதன் பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இன்னொரு பேருந்திலும் என 3 பேருந்துகளில் பயணம் செய்வேன்.

இதனால் நான் வாங்கும் ஊதியத்தில் பேருந்துக் கட்டணமாக மட்டும் மாதத்துக்கு சுமார் ரூ.2,200 செலவிட வேண்டியிருக்கும். இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவு மூலம் அந்தத் தொகை எனக்கு மிச்சமாயிருக்கிறது. எனது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தத் தொகை பேருதவியாக இருக்கும்' என்றார்.

குழந்தைகளுக்காகச் சேமிக்க உதவும்

மாத்தூர் அருகேயுள்ள ஆவூரைச் சேர்ந்த பிரேமா என்பவர் கூறும்போது, ‘திருச்சி சுந்தர் நகர் பகுதியிலுள்ள பேக்கரியில் வேலை செய்கிறேன். வேலைக்குச் சென்று வர பேருந்துக் கட்டணமாக தினமும் ரூ.40 செலவிட வேண்டியிருந்தது. இது, எனது நாள் சம்பளத்தில் சுமார் 15 சதவீதமாகும்.

கடையில் கொடுக்கும் ஊதியம் குடும்பத் தேவைகளுக்காக முன்கூட்டியே செலவாகிவிடுவதால், மாதக் கடைசி நாட்களில் பேருந்துக் கட்டணத்துக்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். இப்போது இலவசமாகப் பயணம் செய்ய அனுமதித்துள்ளதால், பேருந்துக்காகச் செலவிட்ட தொகையை எனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேமிப்பு வைத்துக் கொள்வேன்' என்றார்.

ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருட்கள்

திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் பிரிவில் பணியாற்றும் அம்சவள்ளி என்பவர் கூறும்போது, ''திருவெறும்பூர் அருகிலுள்ள வேங்கூரிலிருந்து தினமும் பேருந்து மூலம் தனியார் மருத்துவமனைக்குப் பணிக்கு வருகிறேன். எனக்கு மாதம் ரூ.8 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் பேருந்துக்காக மட்டும் மாதம் சுமார் 1,200 ரூபாயை செலவிட வேண்டியிருந்தது. இதனால் குடும்பத்தின் மற்ற செலவினங்களுக்குப் பணம் போதாது.

மிகுந்த நெருக்கடியுடன் குடும்பம் நடத்தி வரும் நிலையில், தற்போது முதல்வரின் இந்த அறிவிப்பால் மாதம் 1,200 ரூபாய்க்கு மேல் மிச்சமாகும். இது மற்றவர்களுக்கு சிறு தொகையாகத் தெரிந்தாலும், எங்களைப் போன்ற குடும்பங்களால் ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். எனவே, இப்படிப்பட்ட திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக அரசை பாராட்டுகிறோம்'' என்றனர்.

தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது

ஜீயபுரம் அருகேயுள்ள அல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மேனகா கூறும்போது, ''திருச்சியிலுள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்கிறேன். இத்தனை நாட்களாகப் பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கி பேருந்தில் வந்த நிலையில், இன்று கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்தது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியது. நடத்துநரும் எங்களிடம், 'எங்கு வேண்டுமானாலும் ஏறி, எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். இதைக்கேட்டதும் அந்தப் பேருந்தே நம்முடைய சொந்த வாகனம் என்பதுபோல தோன்றியது.

காரணம் பல நாட்கள், பேருந்துக்குச் செல்ல காசு இல்லாமல் கடைசி நிமிடத்தில் தோழிகளிடம் கேட்கும் நிலை இருந்ததை நினைத்துப் பார்த்தேன். இப்போது கையில் காசு இல்லாவிட்டாலும், பேருந்தில் ஏறி தினமும் வேலைக்குச் சென்று வீடு திரும்பிவிட முடியும் என்ற தன்னம்பிக்கையை என்னைப் போன்ற பெண்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.

SCROLL FOR NEXT