தமிழகம்

தமிழக கடலோர, உள் மாவட்டங்களில் 25-ம் தேதி முதல் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

இலங்கை அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 25-ம் தேதி முதல் கடலோர தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் உருவாகிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடல் பகுதியில் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள் பகுதியில் நேற்று நிலவியது. அது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை நிலவரப்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இது தவிர, இன்று வங்கக்கடலில் இலங்கை அருகில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இருப்பினும் இன்று முதல் 24-ம் தேதி வரை வறண்ட வானிலையே தமிழகத்தில் நிலவும்; 25-ம் தேதி ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெப்பம் அதிகரிப்பு

மழை இல்லாத நிலையில், அதிகாலை வேளையில் பனியும், பகல் வேளை மற்றும் இரவில் வெப்பத்தின் அளவும் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக, சென்னை, கோவை, பாம்பன், திருத்தணி, தஞ்சை, தருமபுரி, திருச்சியில் பகல் வேளையில் நிலவும் அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும், கோவை, தஞ்சை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் நிலவும் குறைந்த பட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT