சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டார், புதிய ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறைக்கு கூடுதல் டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி நியமிக்கப்பட்டார். 11 மாதம் அவர் ஆணையராக இருந்தார் இந்நிலையில் நேற்றிரவு சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டார். உளவுத்துறைக்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
கோவை நகர ஆணையராக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டு உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் மாற்றப்பட்டு மகேஷ்குமார் அகர்வாலுக்கு பதில் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
காவலர் நலன் பிரிவு கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் தாமரைக்கண்ணன் மாற்றப்பட்டு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளிக்குப்பதில் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொறுப்பில் இருந்த மகேஷ்குமார் அகர்வால், ஜெயந்த் முரளி இருவருக்கும் புதிய பொறுப்பு எதுவும் அளிக்கப்படவில்லை.