தமிழகம்

12 வயது குழந்தைகளைத் தாக்கும் கரோனா; முழு ஊரடங்கை விரைந்து அமல்படுத்தி தடுப்பூசி போடுவதே தீர்வு: ஐ.எம்.ஏ. இளம் மருத்துவர்கள் பிரிவு தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 12 வயதுக்கு உட் பட்ட குழந்தைகளையும் கரோனாதாக்குவது அதிகரித்து வருவதால்,உடனடியாக முழு ஊரடங்கு அறிவித்து, போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும் என,இந்திய மருத்துவ சங்க இளம் மருத்துவர்கள் பிரிவு தேசியத் தலைவர் அபுல்ஹாசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்ற நிலைஏற்பட்டு இருப்பதால், கரோனாவைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை மட்டுமே மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வந்த தடுப்பூசி நிறுத்தப்பட்டு இருப்பதால், முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு 2-வது தவணைஊசி போடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மே 1-ம் தேதி முதல்18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என அறிவிக்கப்பட்டு, அதுவும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, தற்போதைய சூழலில், கரோனா பரவலை தடுக்க ஒரே தடுப்பு வழி ஊரடங்கு மட்டுமே.

மேலும், கரோனா 2-வது அலையில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்து இருக்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் அரசு வெளியிட்ட பட்டியல்படி, தமிழக அளவில் ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 700 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தாமதமின்றி உடனடியாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், கரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT